'மாண்டஸ்' புயல்: மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் - 8 அடி உயரத்துக்கு அலை எழுந்தது

‘மாண்டஸ்’ புயல் காரணமாக கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. 8 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்தது.

Update: 2022-12-10 09:02 GMT

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது, புயலாக வலுப்பெற்றுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் பகுதிகளில் பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது. நேற்று கடல் அலைகள் 8 அடி உயரத்திற்கு சீறி எழுந்தது. மாமல்லபுரத்தில் கடல் அலைகள் கரைப்பகுதி வரை 13 மீட்டர் தூரம் வரை முன்னோக்கி ஆர்ப்பரித்து வந்தன.

இந்த நிலையில் மாண்டஸ் புயலால் பலத்த காற்று வீசும்போது சாலையில் முறிந்து விழும் மரங்களையும், மின் கம்பங்களையும் எப்படி அப்புறப்படுத்துவது என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் முன்னிலையில் அரக்கோணத்தில் இருந்து வந்த பேரிடர் வீரர்கள் விளக்கி கூறினர்.

அப்போது மரம் அறுக்கும் கருவி மூலம் அறுத்து எப்படி அகற்றுவது போன்ற விளக்கத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் விளக்கி கூறினர். அப்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பேரிடர் மீட்பு கருவிகளையும் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கினர். புயலால் பலத்த மழை பெய்யும் நிலையில் தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கும் நபர்களை ரப்பர் படகு மூலம் மீட்டு வந்து எப்படி முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது போன்ற நிகழ்வுகளையும் விளக்கி கூறினர்.

மேலும் பேரிடர் மீட்புக்கு தேவையான சுவரை துளையிடும் கருவி, இரும்பு வெட்டும் கருவி, மரம் வெட்டும் கருவி, தண்ணீர் இறைக்கும் மோட்டார், முறிந்து விழுந்த மின் கம்பங்களை கட்டி இழுக்கும் கயிறுகள் முதலியவை தயார் நிலையில் உள்ள காட்சியையும் போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார். பலத்த மழை பெய்து இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் மின் மோட்டார் வைத்து இறைத்து மீட்பு பணிகளில் ஈடுபடுமாறும் பேரிடர் வீரர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் கூறியதாவது:-

மாமல்லபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 300 வீரர்கள் கொண்ட 3 பேரிடர் குழுக்கள், 600 போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மாமல்லபுரம் கடற்கரையில் பலத்த காற்று வீசியதால் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

பலத்த காற்று வீசியதால் அங்குள்ள படகுகள் கடலில் அடித்து செல்லாமல் இருக்க பொக்லைன் எந்திரம் மூலம் அனைத்து படகுகளும் கடற்கரை கோவிலின் பின் பக்கம் உள்ள மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டது. மாமல்லபுரம் மீனவர் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையை சேர்ந்த மற்றொரு பேரிடர் குழுக்களும் ரப்பர் படகு, மிதவைகள், கயிறுகள், மரம் அறுக்கும் கருவிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பேரிடர் மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்