புயல் முன்னெச்சரிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 3-ந்தேதி வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'மிக்ஜம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வருகிற 4-ந்தேதி சென்னைக்கு வடக்கே ஆந்திர மாநில பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு நாளை முதல் வருகிற 5-ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்புகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிகிறார்.
மேலும் புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.