பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம்

கூடலூர் அருகே கூட்டுறவு தொழிற்சாலையில் புதிய எந்திரம் பொருத்தும் பணி தொடங்கியதால், பச்சை தேயிலை கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Update: 2022-06-14 13:56 GMT

கூடலூர், 

கூடலூர் அருகே கூட்டுறவு தொழிற்சாலையில் புதிய எந்திரம் பொருத்தும் பணி தொடங்கியதால், பச்சை தேயிலை கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொள்முதல் நிறுத்தம்

கூடலூர் 2-ம் மைல் பகுதியில் சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்ளது. இங்கு 2,500 சிறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தங்களது தோட்டங்களில் தினமும் பச்சை தேயிலை பறித்து வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலையை கொள்முதல் செய்து, தேயிலைத்தூள் உற்பத்தி செய்து வருகிறது.

இதனால் தினமும் சராசரியாக 40 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலை கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் சுழற்சி அடிப்படையில் சொற்ப அளவிலான பச்சை தேயிலை மட்டும் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அறுவடை செய்த தேயிலையை விவசாயிகள் தரையில் கொட்டி வந்தனர். பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்துக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை எனக்கூறி பச்சை தேயிலைடிய பறிக்காமல் விட்டு உள்ளனர்.

நஷ்டத்துக்கு ஆளாகும் விவசாயிகள்

இதன் காரணமாக செடிகளில் பச்சை தேயிலை இலைகள் முதிர்ச்சி அடைந்து வருகிறது. கூட்டுறவு தொழிற்சாலையில் கொள்முதல் பரவலாக நிறுத்தப்பட்டு உள்ளது குறித்து விவசாயிகள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டனர். அதற்கு தொழிற்சாலையில் ரூ.5 கோடி மதிப்பிலான புதிய எந்திரம் பொருத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் தேயிலைத்தூள் உற்பத்தி நடைபெறாததால், கொள்முதல் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் பச்சை தேயிலை வீணாகி விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே எந்திரம் பொருத்தும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். கடந்த கோடை காலத்தில் வறட்சியால் விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இந்த சமயத்தில் புதிய எந்திரம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட வில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்போது பரவலாக மழை பெய்து பச்சை தேயிலை மகசூல் அதிகரித்தது. இந்த நேரத்தில் எந்திரம் பொருத்தும் பணி தொடங்கப்பட்டதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து தேயிலை செடிகளும் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. இதே நிலை தொடர்வதை தவிர்க்க விவசாயிகளிடம் பச்சை தேயிலையை கொள்முதல் செய்து, பிற கூட்டுறவு தொழிற்சாலை அல்லது தனியார் தொழிற்சாலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் புதிய எந்திரத்தை விரைவாக பொருத்தி இயக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்