விதிகளை மீறி கல் குவாரிகள், லாரிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
விதிகளை மீறி கல் குவாரிகள், லாரிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கல் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
கல் குவாரி, கிரஷர் பகுதிகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும். இதற்கு அரசு வழிகாட்டுதலுடன் அனுமதி பெற்று இயக்க வேண்டும். லாரி உரிமையாளர்கள் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களை பணியமர்த்திட வேண்டும்.
மேலும் லாரிகளில் உரிய அளவில் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். எடுத்துச் செல்லும் பொருட்கள் மீது தார்பாய் போர்த்தி எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக அதிவேகத்தில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாக கடைபிடித்தால் விபத்துக்கள் என்பதை முற்றிலும் தவிர்த்திடலாம்.
அதிகாரிகள் ஆய்வு
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 வரைக்கும் குவாரிகளில் இருந்து லாரிகளை இயக்க வேண்டாம். அதேபோல் வட்டார போக்குவரத்து அலுவலரின் அனுமதி பெற்று அனைத்து லாரிகளிலும் வேக கட்டுப்பாட்டுக் கருவி பொறுத்தி பயன்படுத்த வேண்டும். மேலும் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கனிமவளத்துறை, வருவாய், காவல், மாசுகட்டு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவார்கள். அப்போது, விதிமுறைகளை மீறி குவாரிகள், லாரிகள் இயங்கினால் உரிமையாளர்கள் மீதுதான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலை பணி
எனவே அரசு விதிகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பான முறையில் தொழில்களை செயல்படுத்திக்கொள்ள வேண்டும். கண்காணிப்பு கேமாராக்களையும் பொறுத்த வேண்டும். தங்கள் குவாரி பகுதியில் இருந்து மெயின்ரோடு பகுதிக்கு வரும் வரை இடையில் உள்ள சாலைகளை அந்தந்த பகுதி குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து புதுப்பித்திட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இருந்தால் அதுவும் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், திண்டிவனம் கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, கனிமவளத்துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி, மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர் காமராஜ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், கிரஷர், குவாரி உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.