2 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு; வாலிபர் கைது

பூதப்பாண்டி அருகே கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-27 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கண்டக்டருடன் தகராறு

பூதப்பாண்டி அருகே உள்ள தெரிசனங்கோப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனம் பிள்ளை (வயது 53). இவர் நாகர்கோவில்-காட்டுப்புதூர் செல்லும் பஸ்சில் கண்டக்டராக உள்ளார்.

இந்த பஸ் எப்போதும் இரவு நேரத்தில் காட்டுப்புதூரில் நிறுத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் கடைசி நேர பஸ்சாக நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து காட்டுப்புதூர் நோக்கி பஸ் புறப்பட்டது. இந்த பஸ் இறச்சகுளம் பகுதியை சென்றடைந்த போது இறச்சகுளம் முத்தாரம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தொழிலாளியான ஜார்ஜ் பெர்னான்டன் என்ற சிபின் (22) என்பவர் பஸ்சில் ஏறினார்.

பின்னர் பஸ் இறுதியாக காட்டுப்புதூரை சென்றடைந்த போது கண்டக்டர் ஜனார்த்தனம் பிள்ளை, சிபினை இறங்கும்படி கூறியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

2 பஸ்கள் மீது கல்வீச்சு

இதில் ஆத்திரமடைந்த சிபின் அங்கிருந்த கட்டையை எடுத்து ஜனார்த்தனம் பிள்ளையை தாக்கியதோடு பஸ்சின் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்துள்ளார்.மேலும் அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு அரசு பஸ் மீதும் கல்வீசி அவர் தாக்கினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது.

இதுகுறித்து ஜனார்த்தனம் பிள்ளை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிபினை கைது செய்தனர்.

பெண்களுக்கு கொடுப்பது போல் எனக்கும் இலவச பயணச்சீட்டு வேண்டும் என கூறி சிபின் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

நள்ளிரவில் கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறில் 2 அரசு பஸ்கள் மீது வாலிபர் கல்வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்