கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு;
திருவண்ணாமலை
ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை முக்கிய பகுதியாகும்.
இந்த கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் தங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி தினமும் பக்தர்கள் பலர் கிரிவலம் செல்கின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பை கருதி காவல் துறை சார்பில் பகல், இரவு நேரங்களில் ரோந்து வாகனம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று பகல் சுமார் 12 மணியளவில் கிரிவலப்பாதையில் உள்ள பழனியாண்டவர் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக சென்ற மக்கள் மற்றும் அங்கிருந்த சாதுக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கிரிவலப்பாதை ரோந்து போலீசார் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார் அந்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததால் அவரை போலீசார் அங்கேயே விட்டு சென்றனர்.
போலீசார் இருக்கும் வரை அமைதியாக இருந்த அவர் போலீசார் சென்றதும் அங்கும், இங்கும் நடந்து கொண்டு சத்தம் போட்டு கொண்டிருந்தார்.