பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்கள் தடுப்பு குழு அமைக்க நடவடிக்கை - கூடுதல் டி.ஜி.பி. தகவல்

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்கள் தடுப்பு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தெரிவித்துள்ளார்.;

Update:2023-03-20 14:10 IST

ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் காவல்துறை மண்டலம் சார்பில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 70 பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமீப காலமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் பல்வேறு போதை பொருட்களால் தங்கள் கல்வி மற்றும் இளமையை தொலைத்து அதில் இருந்து மீள முடியாத அளவுக்கு அடிமையாகும் நிலைமை உருவாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி கல்லூரிகளில் அதிக அளவில் விழிப்புணர்வு மேற்கொண்டு போதையில்லா தமிழகம் உருவாக போலீஸ்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

எனவே, போதைப்பொருட்கள் வரும் நிலைகளை கண்டறிதல், அதனை தடுக்க குழுக்கள் அமைத்தல், அந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க உதவும் ஆஸ்பத்திரிகள் குறித்த தகவல்கள், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீஸ்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

போதை பொருள் தடுப்புக்குழு

இதனை தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி. சங்கர் பேசுகையில்:-

போதைப்பழக்கங்களால் தற்போதைய இளைஞர்கள் அதிக அளவில் சீரழிவதை தடுக்க எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க வேண்டும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் தொழிற்சாலை, கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் பணிபுரியும் வட மாநிலதொழிலாளர்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதை பார்க்கும் மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.

எனவே அனைத்து கடைகளிலும் போலீசார் கடுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும், இதுகுறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் கண்ணில் தெரியும்படி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் காஞ்சீபுரம் மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு குழு உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் போதை இல்லா காஞ்சீபுரம் மண்டலம் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. பகலவன், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேபாஸ் கல்யாண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்