கொப்பரை தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து தடையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

விவசாயிகளிடம் இருந்து ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2023-06-18 09:11 GMT

சென்னை,

விவசாயிகளிடம் இருந்து ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய வேளாண்மையான கொப்பரை தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து தடையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கு மாவட்டங்களில் உள்ள 71 அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஏப்ரல் மாதம் முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இலக்கு முடிந்து விட்டது என கூறி கொள்முதலை நிறுத்தி இருப்பது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிச்சந்தையில் தேங்காய் விலை குறைந்த நிலையில் விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களை மட்டுமே நம்பி இருக்கும் சூழலில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை திடீரென நிறுத்தியது ஏற்புடையதல்ல.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கொப்பரை தேங்காயை சேமித்து வைக்கக் கூடிய வசதிகள் இல்லாத நிலையில், மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களை திறக்கவும், விவசாயிகளிடம் இருந்து ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்