ஆலடி அருணா லிபரல் கலை-அறிவியல் கல்லூரியில் மாநில செஸ் போட்டி
ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை-அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
மறைந்த முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணாவின் 90-வது பிறந்தநாள் விழாவையொட்டி ஆலங்குளம் சிவலார்குளம் நர்சிங் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி தலைவருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா செஸ் போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் தனது தந்தை ஆலடி அருணாவின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி, உதயசூரியன் சின்னம் பொறித்த 'கேக்' வெட்டி கொண்டாடினார்.
இந்த செஸ் போட்டி 9 வயது, 12 வயது, 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள், அனைத்து பிரிவினருக்கு பொது என்று தனித்தனியாக 7 பிரிவுகளாக நடத்தப்படடன. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருச்சி, செங்கல்பட்டு, கடலூர், ஈரோடு, நாகர்கோவில், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வீரர், வீராங்கனைகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா ஆலடி அருணா நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடந்தது. டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முத்தமிழ் செல்வன் முன்னிலை வகித்தார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை, டாக்டர் ரமேஷ், டாக்டர் சஞ்சீவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், 'செஸ் போட்டி என்பது மற்ற விளையாட்டுகள் போல் அல்லாமல் மூளைக்கு அதிக அளவில் வேலை கொடுக்கின்ற ஒரு போட்டி ஆகும். இதில் பங்கேற்ற அனைவரும் திறமையானவர்கள். இந்த போட்டி ஆலடி அருணாவின் 90-வது பிறந்தநாளில் நடத்தப்படுவது பெருமைக்கு உரியது. போட்டியில் வெற்றி தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. தோல்வி அடைந்தவர்களுக்கு அடுத்த வாய்ப்பு காத்திருக்கிறது' என்று கூறினார்.
நிகழ்ச்சியில், ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசியர்கள், ஆலடி அருணா நர்சிங் கல்லூரி அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலடி அருணா அறக்கட்டளை செய்திருந்தது.