கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்

அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இவற்றை குடோன்களுக்கு அனுப்பி வைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Update: 2023-02-23 18:45 GMT

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இவற்றை குடோன்களுக்கு அனுப்பி வைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அறுவடை

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இந்த பகுதியில் தற்போது அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள்.

ஏராளமான விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து விற்பனை செய்வதற்காக காத்திருக்கிறார்கள். கொள்முதல் நிலையங்கள் முன்பு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் தாமதம்

பாதுகாப்பான இடங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதற்கு உண்டான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நெல் கொள்முதல் தாமதமாவதால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நிலையத்தில் இருந்து உடனடியாக தஞ்சை மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக குடோன்களுக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

பாதுகாக்க நடவடிக்கை

அம்மாப்பேட்டை அருகே புத்தூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் வெட்ட வெளியில் ஏராளமான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே பருவம் தவறி பெய்த மழையால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு அரசு உரிய நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்