குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்
வாருகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனைக்குட்டம் பஞ்சாயத்து பகுதியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்கும் பெரும்பாலான பகுதிக்கு போதிய சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் மழை காலங்களில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மெயின் ரோட்டுக்கு வருவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் சிவகாசி- விருதுநகர் ரோட்டில் இருந்து ஆனைக்குட்டம் கிராமத்திற்கு செல்லும் பகுதியில் 2 பக்கமும் போதிய வாருகால் வசதி இல்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்கேயே குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீர் கூட வெளியேற முடியாத நிலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் வீட்டில் முடங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆனைக்குட்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியை ஆய்வு செய்து போதிய வாருகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.