தங்க தோளுக்கினியானில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி வீதி உலா

தங்க தோளுக்கினியானில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி வீதி உலா நடந்தது.

Update: 2023-03-18 20:03 GMT

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டத்தின் எல்லையில், கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராக சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக உற்சவம் கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை பூவராகசுவாமி பல்லக்கிலும், மாலையில் தினமும் ஒவ்வொரு வாகனத்திலும் வீதி உலா வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி பூவராகசுவாமி, சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடலில் தீர்த்தவாரிக்காக புறப்பட்டார். மறுநாள் கிள்ளையில் உள்ள மசூதியில் இஸ்லாமியார்களால் சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று மதியம் கடலில் பூவராகசுவாமி தீர்த்தவாரி கண்டருளினார்.

இதைத்தொடர்ந்து சிதம்பரம், புவனகிரி, குமாரகுடி, பாளையங்கோட்டை, ராமாபுரம் வழியாக சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக, ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையத்திற்கு நேற்று முன்தினம் பூவராக சுவாமி வந்தடைந்தார். சுவாமிக்கு கவரப்பாளையம் கிராம நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை பூவராகசுவாமி தங்க தோளுக்கினியானில் எழுந்தருளி கவரப்பாளையம் கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் வீதி உலா வந்தார். இதைதொடர்ந்து பால், தயிர், இளநீர், மஞ்சள் போன்ற பொருட்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.

இரவில் முத்துப்பல்லக்கில் மேளதாளத்துடன் வாணவேடிக்கை, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் கவரப்பாளையம், ஆண்டிமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை கவரப்பாளையம் கிராமத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்திற்கு பூவராக சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்