நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி

குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

Update: 2022-09-12 18:55 GMT

நாகர்கோவில்:

குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

குறுவட்ட அளவிலான...

குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் குமரி மாவட்ட குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில் இருந்து 4 குறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குறுவட்டத்திற்கும் ஒரு நாள் என போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்கள்

அதன்படி நேற்று தோவாளை குறுவட்ட அளவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டியை நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

இதில், 6 முதல் 8-ம் வகுப்பு வரை (15 வயதிற்குள்), 9 முதல் 10-ம் வகுப்பு வரை (17 வயதிற்குள்) மற்றும் 11 முதல் 12-ம் வகுப்பு வரை (19 வயதிற்குள்) என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு போட்டிகள்

போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 510 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். இதில் 100, 200, 400, 600, 1,500 மற்றும் 3,000 மீட்டர் ஓட்டப்போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு ஏறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்