"தமிழை மீட்டெடுப்பதே நோக்கம்-எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல"; ஜி.கே.மணி பேட்டி
தமிழை மீட்டெடுப்பதே நோக்கம். எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
பா.ம.க. சார்பில் 'தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை' பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் நடக்கிறது. இதையொட்டி மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. இதனை பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 'தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை' பயணத்தை உலக தாய்மொழி நாளான கடந்த 21-ந்தேதி சென்னையில் தொடங்கினார். பயணத்தின் நிறைவு நாளான நாளை (அதாவது இன்று) திண்டுக்கல்லில் பா.ம.க. சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் அன்றைய தினம் மாலையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு சென்று தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்பரை பயணத்தை நிறைவு செய்கிறார்.
தமிழை மீட்டெடுப்பதே பா.ம.க.வின் நோக்கம். எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல. ஆனால் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் தமிழை கண்டிப்பாக படிக்க வேண்டும். தாய்மொழியில் படித்தால் தான் அவர்களின் கல்வி அறிவு மேன்மையடையும். தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இந்த பரப்புரை பயணத்தை மேற்கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.