எடப்பாடி பழனிசாமி மக்கள் செல்வாக்கை நிரூபித்து காட்டுவார்; முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி மக்கள் செல்வாக்கை நிரூபித்து காட்டுவார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

Update: 2023-01-23 16:35 GMT

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பழனி அருகே கீரனூர் பஸ் நிறுத்த பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன் என்ற கருப்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், கீரனூர் பேரூர் செயலாளர் குப்புசாமி, ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, பால் விலை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தி தமிழக மக்கள் மீது விலைவாசி உயர்வை சுமத்திவிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து ரசித்துக்கொண்டிருக்கிறார். திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தடையின்றி விற்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து பிரிந்தபோது திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, தமிழக மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று தனது தனித்துவத்தை நிரூபித்தார். அதேபோல் தற்போது நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறும். அதன்மூலம் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்து காட்டுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில அமைப்புச்செயலாளர் மருதராஜ், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், மேற்கு மாவட்ட பொருளாளர் பழனிவேல், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் நடராஜன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் தொப்பம்பட்டி ஒன்றிய துணைச்செயலாளர் கே.சி.முருகேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்