ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-08-03 21:05 GMT

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பண்ணாரி மாரியம்மன் கோவில்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு நேற்று சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து குவிந்தனர்.

அதுபோல ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் அம்மனை தரிசிக்க கூட்டம் கூட்டமாக வந்தனர். காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வரிசையில் நின்று உள்ளே சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

அதன்பின்னர் வெளியே வந்து அங்குள்ள குண்டத்தில் இருந்த சாம்பலை எடுத்து திருநீறாக நெற்றியில் வைத்துக் கொண்டார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாதவர்கள் பலரும் குண்டம் அருகிலேயே தேங்காய் உடைத்து பழங்களை வைத்து, கற்பூரம் ஏற்றி அம்மனை வணங்கினார்கள். மேலும் நேர்த்திக்கடனுக்காக பெண்கள் பலரும் விளக்கு ஏற்றியும், உப்பு மிளகு கலந்து குண்டம் அருகிலே தூவியும் வழிபட்டனர்.

இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னிமலை

இதேபோல் சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் கோமாதா பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து வழக்கமான 6 கால பூஜைகள் மற்றும் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல கோவிலுக்கு சொந்தமான பஸ்கள் கூடுதல் முறை இயக்கப்பட்டன.

அதேபோல் சென்னிமலை மாரியம்மன் கோவில், மைலாடி செல்லாண்டியம்மன் கோவில், வெள்ளோடு ராஜா சாமி கோவில், எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில், குருக்கள்பாளையம் பொடாரம்மன், தொட்டம்பட்டி மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கிராமப்புற கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அந்தியூர்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், சந்திபாளையம், காட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோபி

கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் காலை 6 மணி அளவில் சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மேலும் கோபி சாரதா மாரியம்மன் கோவில், கோபி தண்டு மாரியம்மன் கோவில், மொடச்சூர் பால மாரியம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில், கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோவில் மற்றும் பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், அருள்மலை முருகன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவில், நெரிஞ்சிப்பேட்டை காசிவிஸ்வநாதர், வெள்ளித்திருப்பூர், அம்மாபேட்டை கரியகாளியம்மன் கோவில், செம்முனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்