கோவில்களில் சிறப்பு வழிபாடு

சேலம் மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-04-06 20:15 GMT

கொண்டலாம்பட்டி

சேலம் மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவில் திருவிழா

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி சிறுவர்-சிறுமிகளின் சிலம்பாட்டம், மல்லர் கம்பத்தில் ஏறுதல் மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதேபோன்று சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பலப்பட்டறை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கருப்பூர்-இளம்பிள்ளை

சேலம் கருப்பூரில் உள்ள கந்தசாமி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து மாரியம்மன் திருக்கல்யாண உற்சவமும், மாலை காளியம்மன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து காளியம்மன் கோவில் முன்பு தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

வடசென்னிமலை

தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) சத்தாபரணமும், சாமி புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும், நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகிறது.

ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்