ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-07-17 18:44 GMT

ஆடி மாத பிறப்பு-அமாவாசை

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். நேற்று ஆடி மாத பிறப்பு மற்றும் ஆடி மாதத்தின் முதல் அமாவாசை என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். மதியம் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

பக்தர்கள் நீண்ட வரிசையில்...

இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. ஆடி மாத பிறப்பையொட்டி பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு 15-வது வார்டு புதிய காலனியில் உள்ள செல்வமாரியம்மன், விநாயகர், நாக கன்னியம்மன் கோவிலில் 9-வது ஆண்டாக பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் மாலையிலும், விளக்கு பூஜை இரவிலும் நடைபெற்றது.

பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடி மாதத்தில் வருகிற 4 வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, அமாவாசை ஆகிய நாட்களில் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்