குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.;
சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் வரும் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இந்நிலையில் ஆடி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் சுரபி நதியில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து சனீஸ்வர பகவான் கோவிலின் உள்ள காவல் தெய்வமான கருப்பண்ணசாமிக்கு நாளை (திங்கட்கிழமை) மதுபான படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.