தென்காசி-வாரணாசி இடையே சிறப்பு சுற்றுலா ரெயில்

தீபாவளியை முன்னிட்டு தென்காசி-வாரணாசி இடையே சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் தெரிவித்தார்.

Update: 2023-09-09 18:45 GMT

குற்றாலத்தில் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) தென் மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் 2 சுற்றுலா ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு சிறப்பு சுற்றுலா ரெயில் 'தீபாவளி கங்கா ஸ்நானம்' யாத்திரை என்ற பெயரில் இயக்கப்பட உள்ளது. வருகிற நவம்பர் 9-ந்தேதி தென்காசியில் இருந்து புறப்பட்டு மதுரை, சென்னை எழும்பூர் வழியாக வாரணாசி வரை 16 இடங்களுக்கு சுற்றுலா செல்கிறது. இந்த ரெயில் 9 பகல் மற்றும் 8 இரவு பயணத்துக்கு பிறகு மீண்டும் ராமேசுவரம் வந்து சேரும். தீபாவளி அன்று உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமம் இடத்துக்கு ரெயில் செல்கிறது.

இந்த ரெயிலில் மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அதில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள் 8-ம், குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகள் 3-ம், உணவுக்கூட பெட்டி ஒன்றும் அடங்கும். படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணம் செய்வதற்கு ரூ.16 ஆயிரத்து 850-ம், குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க ரூ.30 ஆயிரத்து 500-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்பவர்களுக்கு காப்பீடு வசதியும் உள்ளது. எல்.டி.சி. சான்றும் வழங்கப்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதால் முதியோர்களுக்கு வசதியாக இந்த ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி அன்று கங்கையில் குளிக்கிற வகையில் வசதி செய்யப்படுகிறது.

இணையதள முகவரியிலும், மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகங்களிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ரெயிலில் ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர்கள் 3 பேர் இருப்பார்கள். ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு பொறுப்பாளர் இருப்பார். சமையல் செய்ய கியாஸ் சிலிண்டர் கிடையாது. மின்சார அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. முழுக்க முழுக்க பாதுகாப்பு நிறைந்தது. வெளியிடங்களை சுற்றி பார்க்கும்போது குளிர்சாதன வசதி உள்ள மற்றும் இல்லாத பஸ் வசதியும், தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவசர மருத்துவ சிகிச்சை வசதியும் உண்டு. தேவையான இடங்களில் ரெயில்வே டாக்டர்கள் மற்றும் அரசு டாக்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தென்காசியில் புறப்படும் இந்த ரெயிலில் ராஜபாளையம், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் பயணிகள் ஏறிக்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல துணை பொது மேலாளர் சுப்பிரமணி உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்