தலைமறைவாக உள்ள திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளை பிடிக்க பெங்களூரு விரைந்தது தனிப்படை

திமுக எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-23 07:42 GMT

சென்னை,

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதி. இவரது மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா.

இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த ஆண்டு மாத சம்பளம் அடிப்படையில் ரேகா (வயது 18) என்ற இளம்பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். பல மாதங்களாக ரேகா வீட்டு வேலை செய்துவந்த நிலையில் அவருக்கு பேசியபடி சம்பளத்தை கொடுக்காமல் ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினா துன்புறுத்தியுள்ளனர்.

மேலும், இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி, ஜாதி ரீதியிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.எல்.ஏ.வின் மருமகள் மெர்லினா அடித்து துன்புறுத்தியதில் ரேகாவின் தலை, முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டிருப்பது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மேலும், தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ரேகா நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் திமுக எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா இருவரும் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில், பணிப்பெண்ணை தாக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினாவை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைமறைவாக உள்ள இருவரும் சைதைப்பேட்டை கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு முன் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.

முன்னதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் திமுக எம்.எல்.ஏ. ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா மீது அளித்த புகாரில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறிப்பிட்டுள்ளதாவது:-

மெர்லினா, நாளுக்கு நாள் என்னை தினமும் கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். அவர் கரண்டி, செருப்பு, துடைப்பக்கட்டை போன்றவற்றால் அடிக்கிறபோது என் தலை, முகம், கால் முட்டி, கை முட்டி என்று எல்லா இடங்களில் அடிப்பார்.

ஒரு நாள் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 வரை அடித்தார். எனக்கு இரத்த காயங்கள் எற்பட்டது. அதுமட்டுமல்லாமல் சுத்திரிக்கோலை கொண்டு என் முடியை வெட்டிவிட்டு தாக்கினார். இதனால் என் உடல் முழுவதும் கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கைகளை தூக்க சொல்லி குழம்பு கரண்டியை கொண்டு என் மார்பில் அடிப்பார். என்னை கீழே படுக்க வைத்து என் முகத்தில் செருப்பு காலால் எட்டி உதைப்பார். இரண்டு கைகளிலும், கன்னத்திலும் தாடையிலும் சூடு வைத்துள்ளார்.

ஒரு நாள் என்னை ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கினார். காலால் எட்டியும் உதைத்தார். அவர் என்னை கடுமையாக தாக்குகிற போதெல்லாம் வீட்டில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராவை ஆப் செய்துவிடுவார். ஒரு முறை அவர்களது 4 வயது மகள் ஆண்ட்ரோ மதிவாணனிடம் அம்மா தொடர்ந்து ரேகாவை அடிக்கிறார் என்று கூறியதற்கு அவர் கேமராவை எடுத்து பரிசோதனை பண்ணி பார்த்தார். அப்போது அந்த நாள் கேமரா அணைக்கப்பட்டிருந்தது.

ஆண்ட்ரோ மதிவாணனும் என்னை இரண்டு முறை அடித்திருக்கிறார். ஒரு முறை தனது மனைவி மெர்லினாவிட ஆண்ட்ரோ , நீ அந்த நாயை என்ன வேண்டுமானாலும் செய்து கொள் ஆனால் என் குழந்தை முன்னால் அடிக்காதே அதனால் நம் குழந்தை பாதிக்கப்படுகிறது என்றார். அது முதல் அவர்களுக்கு இடையே பிரச்சினை வந்தது. அதற்கும் நான்தான் காரணம் என்று கூறி மெர்லினா என்னை கடுமையாக அடித்து சித்திரவதை செய்தார்.

ஒரு முறை என்னை கடுமையாக அடிப்பதை அவர்களது குழந்தை பார்த்துவிட்டு அழுதாள். அவளை சமாதானப்படுத்துவதற்காக என்னை பாட்டு பாடிக் கொண்டே ஆடச் சொன்னார். நானும் ஆடினேன். பின்னால் நின்று இடி கல்லால் என்னை முதுகில் குத்தி நான்றாக ஆடுடி என்று தாக்கினார். இதனால் எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

நான் ஏதேனும் வேலையில் தவறு செய்துவிட்டால், மிளகாய் தூளை தண்ணீரில் கரைத்து குடிக்க சொல்வார். குடிக்காமல் இருந்தால் கரண்டியை எடுத்து தாக்குவார். இதுவரை மூன்று முறை நான் மிளகாய் பொடி, தண்ணீரை குடித்திருக்கிறேன்.

காலை 6.30 மணி முதல் இரவு 1.00 மணிவரை வீட்டு வேலை செய்ய வேண்டும். நான் செய்த ரேசன் அரிசி உணவினை பிரிட்ஜில் வைத்து சாப்பிட நிர்பந்திக்கப்பட்டேன். கடந்த 8 மாதமாக நான் அடிவாங்காத நாட்களே கிடையாது. தினமும் என்னை அடித்து துன்புறுத்தினார்' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்