திருவாரூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 57 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 57 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 57 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை கூறினார்.
குறுவை தொகுப்பு திட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி மற்றும் குறுவை தொகுப்பு திட்டம் தொடர்பாக விவசாயிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது வேளாண்மைத்துறை இயக்குனர் கூறியதாவது:-
நெல் சாகுபடி
வரலாற்றில் முதல் முறையாக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 57 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில், நடப்பாண்டில் இதுவரை குறுவை நெல் நேரடி விதைப்பில் 7,848 ஏக்கரிலும், இயல்பான நடவு முறையில் 26,646 ஏக்கரிலும், செம்மை நெல் சாகுபடி முறையில் 25,816 ஏக்கரிலும் ஆக மொத்தம் 34,493 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை தொகுப்பு திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ரவீந்திரன், உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனா மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.