புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-10-14 20:18 GMT

சேலம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோவில்கள்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமையில் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். அதன்படி நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் மூலவர் அழகிரிநாதருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிரிநாதர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் ஆஞ்சநேயர், பத்மாவதி தாயார், ஆண்டாள், கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாண்டுரங்கநாதர் கோவில்

இதேபோல் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு தத்தாத்திரேயர் அலங்காரமும், ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சின்ன கடைவீதியில் உள்ள பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாமி ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி ஆனந்தா இறக்கம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயணசாமி, சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில், ெபரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

சங்ககிரி

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோவில், மலை மீதுள்ள சென்னகேசவ பெருமாள் கோவில், தேவண்ணகவுண்டனூர் மங்கமலை பெருமாள ்கோவில், நாகிசெட்டிபட்டி நரசிம்மன் கோவில், வி.என்.பாளையம் வசந்த வல்வராயபெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் அயோத்தியாபட்டணத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புரட்டாசி மாத அமாவாசையையொட்டி மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று மேட்டூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில், மேட்டூர் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேவூர், கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில், நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சாமி கோவில், மேச்சேரி கோட்டை சென்றாய பெருமாள் கோவில், ஆறகளூர் கறி வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்