புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.;
தவக்காலம்
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர் பண்டிகையாகும். ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறந்து 3 நாட்களுக்கு பிறகு உயிர்ந்தெழுந்ததை குறிப்பிடும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக இருந்து கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது.
கடந்த 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் புனித வியாழன் அனுசரிக்கப்பட்டது. ேநற்று புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்டதை உணர்த்தும் வகையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஏசுவின் சொரூபம்
புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட சொரூபத்தை வைத்து பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏசுவின் சொரூபத்திற்கு முத்தமிட்டு கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர். இதேபோல் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் ஜெபமாலை அன்னை ஆலயத்தின் சார்பில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சொரூபத்தை வாகனத்தில் வைத்து கிறிஸ்தவர்கள் கையில் சிலுவையை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னர் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் தேவாலயத்தை வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். ஏசு உயிர்ந்தெழுத்தலை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இலுப்பூர், அன்னவாசல்
இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இலுப்பூர் அந்தோணியர் ஆலயம், வயலோகம் இருதய ஆண்டவர் ஆலயம், மருதுப்பட்டி சகாயமாத ஆலயம், பசுமலைப்பட்டி மலைமாதா ஆலயம், முக்கண்ணாமலைப்பட்டி மாதாகோவில், பொம்மாடிமலை, பெருஞ்சுனை, பணம்பட்டி போன்ற இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.