தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.;
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கூட்டுத்திருப்பலி
ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர். விருதுநகர் புனித இன்னாசியர் ஆலயத்தில் விருதுநகர் மறைவட்ட அதிபரும், பங்கு தந்தையுமான அருள்ராய் அடிகளார், துணைப்பங்கு தந்தை சகாய ஜான் பிரிட்டோ அடிகளார் ஆகியோர் தலைமையிலும், விருதுநகர் பாண்டியன் நகர் புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார், விருதுநகர் எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் ஆரோக்கிய அடிகளார் தலைமையிலும், நிறைவாழ்வு நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணிசாமி அடிகளார் தலைமையிலும் சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது.
ஆர்.ஆர். நகரில் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும், சாத்தூர் திரு இருதயஆலயத்திலும், சிவகாசி லூர்து அன்னை ஆலயத்திலும், திருத்தங்கல் புனித அந்தோணியார் ஆலயத்திலும், சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் குழந்தை இயேசு ஆலயத்திலும் சிறப்பு வழிபாடு, ஈஸ்டர் உயிர்ப்புவிழா திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் சி.எஸ்.ஐ. இமானுவேல் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் செல்லப்பாண்டி, பொருளாளர் நெல்சன் துரைராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தாயில்பட்டி
தாயில்பட்டி பரிசுத்த தோமா ஆலயத்தில் சிறப்பு ஆராதனை ஜெபக்கூட்டம் மத போதகர் ஆசிர் ஜெபா தலைமையில் நடைபெற்றது.
அசெம்பிளி ஆப்காட் சபை மற்றும் அன்பின் நகரம், ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை கூட்டங்கள் நடைபெற்றன.