கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2023-01-01 18:45 GMT

2022 -ம்ஆண்டு முடிந்து நேற்று 2023-ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி புத்தாண்டை வரவேற்கும் விதமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி ஆனதும் மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் நேரிலும், செல்போன் மூலமாகவும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் புத்தாண்டையொட்டி விழுப்புரத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், சி.எஸ்.ஐ. தூய ஜேம்ஸ் ஆலயம், சேவியர் காலனி தூய பவுல் மிஷினரி ஆலயம், விழுப்புரம் நகர போலீஸ் நிலையம் அருகில் உள்ள டி.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

புத்தாடை

நள்ளிரவு 12 மணிக்கு ஆலயங்களில் மணி ஒலிக்கவும் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். சிறுவர், சிறுமிகளும் புத்தாடை அணிந்து கேக் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்