குருத்தோலை ஞாயிறையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

நாமக்கல்லில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.;

Update: 2023-04-02 18:45 GMT

குருத்தோலை ஏந்தி ஊர்வலம்

இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும், அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாகவும் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். சிலுவையில் அறையப்படும் முன்பு ஜெருசலேம் நகருக்கு வந்த இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதை மீது அமர வைத்து பவனியாக அழைத்து வந்தனர். அப்போது தாவீதின் குமாரருக்கு ஓசன்னா என பாடல்கள் பாடியவாறு அவரை மகிமைபடுத்தினர்.

இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை யொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பங்குதந்தை செல்வம் தலைமை தாங்கினார்.

சிறப்பு பிரார்த்தனை

தேவாலய வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் துறையூர் சாலை வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் நாமக்கல் கணேசபுரம் சி.எஸ்.ஐ. சர்ச், தமிழ் பாப்திஸ்து திருச்சபை, ஏ.ஜி. சர்ச் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

திருச்செங்கோடு

இதேபோல் திருச்செங்கோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. திருச்செங்கோட்டில் முக்கிய நகர வீதிகளில் திருச்சபையார் அனைவராலும் ஊர்வலமாய் தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா என்ற முழக்கத்தோடு இயேசு கிறிஸ்து எருசலேம் நகரில் சென்ற வெற்றி பவனியை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் இவ்வாலயத்தின் ஆயர் ஜோஸ் ராபர்ட், செயலர் பீட்டர் செல்வராஜ், பொருளர் வினோத்குமார் மற்றும் திருச்சபையர் அனைவரும் இணைந்து கூட்டமாய் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்