ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி, அம்பாள், ராகு, கேது ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் ராகு, கேதுவுக்கு ஷோடச உபசாரங்கள் மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற்றது. சிவபுராணம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.