அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-08-11 18:45 GMT

விழுப்புரம்

ரத உற்சவம்

விழுப்புரம் வி.மருதூரில் பிரசித்தி பெற்ற ஏழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 1-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் துஜாரோகனம், சிங்க வாகனம், பூத வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது.

இதனை தொடர்ந்து ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று ரத உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஏழை மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். இத்தேரானது, வி.மருதூர் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன் பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜை

இதேபோல் விழுப்புரம் சாலாமேடு மின்வாரிய காலனியில் உள்ள பொன்னியம்மன் கோவில், முத்தோப்பு அகரம்பாட்டை ஏழை மாரியம்மன், விழுப்புரம் பூந்தோட்டம் மேட்டுத்தெருவில் உள்ள மொட்டை மாரியம்மன், விழுப்புரம் பாத்திமா லே அவுட்டில் உள்ள புவனேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் கொண்டு வந்திருந்த கூழ், ஒரு கொப்பறையில் ஊற்றி சாகை வார்க்கப்பட்டு அம்மனுக்கு படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேலும் விழுப்புரம் நேருஜி சாலை வீரவாழியம்மன் கோவில், பூந்தோட்டம் முத்துமாரியம்மன், அங்காளம்மன், கோலியனூர் புத்துவாயம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்