அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-11 21:15 GMT


கிணத்துக்கடவு


ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கடைசி வெள்ளி

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுயம்புவாக உள்ள சூலக்கல் மாரியம்மனுக்கு பன்னீர் சந்தனம், பால், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் அம்மன் மஞ்சள், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

கிணத்துக்கடவு சிவலோக நாயகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே உள்ள கரியகாளியம்மன் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில், அங்காலம்மன் கோவில், முள்ளுப்பாடி ஸ்ரீ மாகாளியம்மன் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

ஊஞ்சல் உற்சவம்

பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு பஞ்ச அம்மன், மீனாட்சியம்மன், காமாட்சியம்மன், ஆண்டாள் மற்றும் 108 சிலக பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், 8 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


பொள்ளாச்சி-ஊத்துக்காடு ரோட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோன்று மாகாளியம்மன் கோவில், அழகுநாச்சியம்மன் கோவில்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


சிறப்பு பூஜை


நெகமம் அருகே செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, ஊர்வலமாக கோவிலை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு வகையான கனிவகை அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.


இதேபோல் செட்டியக்காபாளையம் மாரியம்மன் கோவில், நாகம்மன் கோவில், தேவணாம்பாளையம் மாரியம்மன் கோவில், அமணீஸ்வரர் கோவில், நெகமம் மாகாளியம்மன் கோவில், நெகமம்-திருப்பூர் ரோட்டில் உள்ள மாயாண்டீஸ்வரர் கோவில், பெரியகளந்தை ஆதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.


Tags:    

மேலும் செய்திகள்