முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு ஆடி மாதாந்திர வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 10 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஆடி மாதாந்திர வெள்ளிக்கிழமை மகிமை பற்றி ஆன்மீக சொற்பொழிவாற்றினார். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு அருள் வாக்கு நடந்தது. மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.