கும்மிடிப்பூண்டி அருகே ரூ.5 லட்சம் தாமிர கம்பி திருட்டு வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.5 லட்சம் தாமிர கம்பி திருட்டு வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-03 08:56 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் லக்காராம் (வயது 38) என்பவருக்கு சொந்தமான மின் சாதனம் மற்றும் இரும்பு கடை உள்ளது.

கடந்த 28-ந் தேதி நள்ளிரவு கடையின் இரும்பு கதவுக்கான பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தாமிர வயர்களையும், கல்லா பெட்டியை திறந்து ரூ.30 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவு காட்சிகளை கொண்ட சாதனத்தையும் அவர்கள் எடுத்து சென்றனர்.

ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் இந்த வழக்கில் துப்பு துலக்கி மர்ம நபர்களை கூண்டோடு பிடித்திட 3 போலீசார் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் திருட்டு சம்பவம் நடந்த கடையின் அருகே பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளின் அடிப்படையிலும், சம்பவத்தின் போது, ஒரு சில மணி நேரத்தில் அந்த பகுதியில் இருந்து அருகே உள்ள சோதனைச்சாவடிகளை கடந்து சென்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்களின் பதிவெண்களையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கடையில் பகல் நேரத்தில் நன்றாக நோட்டமிட்டு ஏற்கனவே திட்டமிட்ட நிலையில் இந்த திருட்டு சம்பவத்தை மர்ம ஆசாமிகள் அறங்கேற்றி உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழைய குற்றவாளிகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? எனவும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்