டெங்கு பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்
டெங்கு காய்ச்சல் பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இம்மாதம் 610 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், கடந்த 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு வாரத்தில் மட்டும் 227 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெங்கு பாதிப்பு கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 45 சுகாதார மாவட்டங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மொத்தமாக 9 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் 4 முதல் 5 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று டெங்கு காய்ச்சல் பரவுவதை கண்காணிக்க வேண்டும். மேலும் தினசரி ஏற்படும் நோய் பாதிப்பை கண்காணித்து கொசு உருவாவதை தடுக்க திடீர் சோதனையும் மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.