தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் புத்தாடை அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-12-24 19:40 GMT

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் புத்தாடை அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு முன் ஸ்டார்களை தொங்க விட்டும், வீட்டை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரித்தும், கிறிஸ்துமஸ் குடில் அமைத்தும் பண்டிகையை வரவேற்றனர்.

சிறப்பு திருப்பலி

மேலும் திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. அத்துடன் பல தேவாலயங்களின் முன்புறத்தில் கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் குடில்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சியில் தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் சிறப்பு திருப்பலி தொடங்கியது. திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் திருப்பலியை நடத்தினார். பங்கு தந்தை சகாயராஜ் முன்னிலை வகித்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

குழந்தை இயேசுவின் சொரூபம்

நள்ளிரவு 12 மணி ஆனதும் ஆலயத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலுக்கு கொண்டுவரப்பட்டு முன்னணியில் கிடத்தப்பட்டது. அப்போது இயேசு பிறப்பின் பாடல்களை கிறிஸ்தவர்களால் உற்சாகமாக பாடப்பட்டன. திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருச்சி மெயின்கார்டு கேட்டில் உள்ள லூர்து அன்னை ஆலயம், பாலக்கரை சகாயமாதா பசிலிக்கா, புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம், கிராப்பட்டி ெதரேசாள் ஆலயம், கருமண்டபம் குணமளிக்கும் மாதா ஆலயம், எடத்தெரு புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஏர்போர்ட் புனித அந்தோணியார் ஆலயம், கே.கே.நகர் ஜெகன்மாதா ஆலயம், காட்டூர் அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் பங்கு தந்தையர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. மேலும் திருச்சி மாநகரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

'கேக்' விற்பனை அமோகம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் மற்றும் கேக் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் பிறருக்கு வாழ்த்துக்களை கூறினர். இன்று காலை புனித மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பு கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.

இதுபோல அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடக்கிறது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, திருச்சியில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் 'கேக்' விற்பனை அமோகமாக நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கேக் கொடுப்பதற்காக கடைகளில் நள்ளிரவுக்கு மேலும் திரண்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்