்ஜமேஷா முபின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை
்ஜமேஷா முபின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை;
கோவை
கோவையில் காரில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் இருந்த மடிக்கணினியை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கியாஸ் சிலிண்டர் வெடித்தது
கோவை கோட்டைமேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் வந்த கார் வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் உடல் கருகி பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அத்துடன் கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள் (பால்ராஸ்), ஆணிகள் உள்ளிட்டவை கிடந்தன.
முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்க்கபட்டது.
5 பேர் கைது
இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த உக்கடம் முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் மீது உபா சட்டமும் பாய்ந்தது.
தற்போது கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர்கள் 5 பேரிடம் தொடர்பு வைத்திருந்தவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் சந்தேகத்தின்பேரில் சிலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய டைரி சிக்கியது
முன்னதாக ஜமேஷா முபின் வீட்டில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையின்போது, முக்கிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் கோவையில் உள்ள 5 இடங்களின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்ததுடன், சில ரகசிய குறியீடுகளும் இருந்தன. எனவே அந்த குறியீடுகள் எதை குறிக்கிறது? 5 இடங்களின் பெயர்களை குறிப்பிட காரணம் என்ன? என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உறவினர் வீட்டில் சோதனை
இதற்கிடையே ஜமேஷா முபின் எங்கு எல்லாம் சென்றார், அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கோவை உக்கடம் வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து தனது உறவினரான அப்சல்கான் (28) என்பவர் வீட்டுக்கு ஜமேஷா முபின் அடிக்கடி சென்று வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
எனவே அப்சல்கான் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலையில் தனிப்படையினர் வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.
அங்கு இருந்தவர்களிடம் ஜமேஷா முபின் எதற்காக இங்கு அடிக்கடி வந்து சென்றார்?, அப்சல்கானிடம் பேசியது என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மடிக்கணினி பறிமுதல்
இதையடுத்து அந்தப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சோதனை நடத்திய பின்னர் அங்கிருந்த ஒரு மடிக்கணினியை போலீசார் கைப்பற்றினர்.
அந்த மடிக்கணினியில் இருப்பது என்ன? அந்த மடிக்கணினியை ஜமேஷா முபின் பயன்படுத்தினாரா?, அந்த மடிக்கணினியில் யாருடைய முகவரி மற்றும் தொடர்புடையவர்கள் பட்டியல் இருக்கிறதா?. அதில் இருந்து யாருக்கேனும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாகன சோதனை
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவையில் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் வாகன சோதனையும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் சந்தேகப்படும்படியாக இருக்கும் நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
------------