மலைப்பகுதியில் கடைகள் அமைப்பது குறித்து தனிக்குழு

சதுரகிரி மலைப்பகுதியில் கடைகள் அமைப்பது குறித்து தனிக்குழு அமைக்க வேண்டும் என நீதிபதி இருதயராணி உத்தரவிட்டார்.;

Update:2023-08-30 02:40 IST

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சதுரகிரி மலைப்பகுதியில் கடைகள் அமைப்பது குறித்து தனிக்குழு அமைக்க வேண்டும் என நீதிபதி இருதயராணி உத்தரவிட்டார்.

விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பழங்குடியின மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான இருதயராணி தலைமை தாங்கினார்.

ராஜபாளையம் அய்யனார் கோவில், ஸ்ரீீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, அத்திகோவில், பிளவக்கல் ஜெயந்த் நகர், வள்ளியம்மாள் நகர், தாணிப்பாறை ராம் நகர் ஆகிய பழங்குடியினர் கிராமங்களில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

மலைப்பகுதியில் கடைகள்

நீதிபதி இருதயராணி:-

வெளி ஆட்களை மாடு மேய்க்க அனுமதிக்கும் வனத்துறை, பழங்குடியின மக்களின் மாடுகளை மேய்க்க அனுமதி அளிப்பதில்லை என புகார் வந்துள்ளது. அதேபோல் சதுரகிரி மலைப்பாதையில் பழங்குடியினர் கடை அமைக்க தடை விதித்துள்ள வனத்துறை, தனிநபர்கள் கடை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக புகார் வந்துள்ளது. நான் சதுரகிரி செல்லும் போது மலை பாதையில் கடைகள் வைக்கப்பட்டு இருந்தது.

ரேஞ்சர்:- வனப்பகுதியில் மாடு மேய்ப்பதற்கோ, கடைகள் வைப்பதற்கோ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதியின்றி வனப்பகுதிக்குள் மாடு மேய்த்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சதுரகிரி மலைப்பாதையில் கடைகள் வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை நீதிபதியிடம் தெரிவித்ததோடு அதிகாரிகளுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நீதிபதி கூறுகையில், விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். சுத்தமான குடிநீர் வழங்க கொடிக்குளம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கடைகள் வைப்பது குறித்து தனிக்குழு அமைத்து உரிய தீர்வு காண வேண்டும். சாதி சான்றிதழ், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு வருவாய்த்துறையினர் விரைந்து தீர்வு காண வேண்டும். செப்டம்பர் 12-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தாசில்தார் முத்துமாரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ராம்கோ தொண்டு நிறுவன மேலாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வனத்துறை அதிகாரிகள் செல்வமணி, கார்த்திக் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்