தூத்துக்குடியில் தேசிய இணையதளத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்ய திங்கட்கிழமை சிறப்பு முகாம்
தூத்துக்குடியில் தேசிய இணையதளத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் திங்கட்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தேசிய இணையதளத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு முகாம்
மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை தேசிய இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளது. அதன்படி www.eshram.gov.in என்ற தேசிய இணைதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்கள் அதிகம் பதிவு செய்யும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சிறப்பு முகாம் நடக்கிறது.
பதிவு செய்யலாம்
இதே போன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாத்திமாநகர், கணேசபுரம், இந்திராநகர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பாத்திமா அன்னை ஆலய வளாகத்தில் உள்ள சிறப்பு மையத்திலும் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டு உள்ள செல்போன் எண், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அடிப்படை விவரங்களுடன் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 16 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.எப், இ.எஸ்.ஐ செலுத்தும் பணியாளராகவும், வருமான வரி செலுத்துபவராகவும் இருக்க கூடாது. இதற்கு எந்தவித பதிவு கட்டணமும் கிடையாது.
எனவே மீன்பிடி தொழிலாளர்கள் உள்பட அனைத்து உடலுழைப்பு தொழிலாளர்களும் தங்களை உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.