விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சிறப்பு முகாம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் நடப்பு ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 82 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் சர்க்கரைத் துறை ஆகிய துறைகளின் திட்டங்களை, தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்துவது மட்டுமல்லாது வேளாண்மை உழவர் நலத்துறையின் தொடர்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி, கால்நடை, கூட்டுறவு, பால்வளம் போன்ற துறைகளின் திட்டங்களும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்ட 82 கிராம பஞ்சாயத்துகளில் உழவர்களுக்கான முகாம் இன்று (வியாழக்கிழமை), அடுத்த மாதம் (பிப்ரவரி) 9-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. முகாம்களில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.
மானியத்தில் இடுபொருட்கள்
மேலும் உழவன் செயலியை விவசாயிகளின் செல்போனில் பதிவிறக்கம் செய்து இடுபொருள் தேவையை பதிவு செய்தல், பயிர் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல், பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் புதிய நபர்களை இணைத்தல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களை பெறுதல், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றம் குடற்புழு நீக்கம் போன்றவையும், இத்திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட இடுபொருட்கள் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது.
முகாம் நடைபெறும் நாட்களில் வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் முகாம்களில் விசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர். எனவே தேர்வு செய்யப்பட்ட 82 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகள் இம்முகாம்களில் பங்கு பெற்று பயன் பெறலாம்.
முகாம் தொடர்பான கூடுதல் விபரம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உழவர் நலத்துறையின் களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.