வேலை நிறுத்தம் அரசியல் உள்நோக்கம் கொண்டது; போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேட்டி

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Update: 2024-01-08 10:42 GMT

சென்னை,

போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன், போக்குவரத்து கழக நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நல இணை-கமிஷனர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், உடன்பாடு ஏற்படாததால் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதனால், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. எனினும், பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி சிறப்பு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் கூறியிருப்பதாவது:-

" போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிக்கைக்காக தமிழகம் முழுவதும் சுமார் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து பிற பேருந்து நிலையங்களுக்கு,  செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து திரும்பி வரும் பயணிகளுக்காக வரும் 16-ம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் அரசியல் உள் நோக்கம் கொண்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் " என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்