பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுத சிறப்பு ஏற்பாடு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-16 20:21 GMT

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பலர் தங்கள் கோரிக்கை மனுவை வெளியே இருப்பவர்களிடம் பணம் கொடுத்து எழுதி கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு இலவசமாக மகளிர் சுய உதவி குழு பெண்கள் மூலம் மனு எழுதி கொடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாவட்ட நிர்வாகத்தினர் நேற்று ஏற்பாடு செய்தனர். இதனால் பலர் அவர்களிடம் சென்று தங்களது கோரிக்கை மனுவை எழுதி வாங்கி பின்னர் அதிகாரிகளை சந்தித்து கொடுத்தனர். இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் பட்டியலின பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி கோரிக்கை மனுக்களை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கூறுகையில், சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி அதிகாரிகளிடம் 100-க்கும் மேற்பட்ட மனு கொடுத்துள்ளேன். ஆனால் அதற்கு அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்களின் நகல்களை மாலையாக அணிவித்து வந்துள்ளேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்