சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2023-01-05 20:23 GMT

ஆருத்ரா தரிசனம்

திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி அம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) திருவாதிரை திருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு 8 மணிக்கு ஏத்தி, இறக்கும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு பச்சை பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் நடராஜர் சன்னதியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை 7 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. கோவிலில் 4-ம் பிரகாரத்தில் நடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து காலை 9 மணிக்கு ஊடல் உற்சவம் நடைபெறுகிறது.

பஞ்சவர்ண சுவாமி

இதேபோல் உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரை நடராஜர்- சிவகாமி தாயாருக்கு மஞ்சள் பொடி, சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு கோவில் வளாகத்துக்குள்ளேயே சுவாமி புறப்பாடு நடக்கிறது.

இதேபோல் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நேற்று இரவு 10.20 மணியளவில் நூற்றுக்கால் மண்டபத்தில் நடராஜர்- சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. உள் மற்றும் வெளி வீதிகளில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள உத்தமர்கோவிலில் நடராஜருக்கு 108 அபிஷேகம் நடைபெற்றது.இதையடுத்து கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு அபிஷேகம் ெசய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சப்தரிஷீஸ்வரர் கோவில்

இதேபோல் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆதிரை விழா 9-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் நடராஜருக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சாமிபுறப்பாடும், இரவு 9 மணி அளவில் நடராஜருக்கு வெள்ளை சாதி புறப்பாடும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. இரவு 1 மணிக்கு சாமி புறப்பாடு நடைபெற்றது. மேலும் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் துவாக்குடியை அடுத்த திருநெடுங்களநாதர் கோவில், திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில், முசிறியில் உள்ள கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில், திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் கோவில், திண்ணக்கோணம் பசுபதீஸ்வரர் கோவில், திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோவில், தொட்டியம் அனலாடீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று இரவு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்