எச்சில் துப்பியதால் தகராறு: தொழிலாளியை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய வாலிபர்

தொழிலாளியை ஓடும் ரெயிலில் இருந்து எட்டி உதைத்து கீழே தள்ளிய வாலிபர், பயந்து தானும் கீழே குதித்ததில் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-07-01 19:43 GMT

திருச்சி,

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி கோட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 25). இவர் பழனியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் சந்திரசேகர் என்பவருடன் மதுரையில் இருந்து கொல்லம் விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறியுள்ளார். ரெயிலில் கூட்டம் அதிகம் இருந்ததால் இருவரும் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்து வந்தனர். அந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்த போது, அதே பெட்டியில் மதுரை மாவட்டம் நத்தம் மெயின் ரோடு ஊமச்சிக்குளத்தை சேர்ந்த வேலு (35) ஏறினார்.

அவர், விஸ்வநாதன், சந்திரசேகர் ஆகியோருக்கு பின்னால் படியின் அருகில் நின்று கொண்டு பயணம் செய்தார். கல்பட்டிசத்திரத்தை கடந்து இரவு 8.20 மணியளவில் ரெயில் வந்து கொண்டிருந்தபோது, வேலு ரெயிலுக்கு வெளியே எச்சில் துப்பியுள்ளார். அது விஸ்வநாதன் மீது படவே, அவர் வேலுவிடம் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த வேலு, ஓடும் ரெயிலில் இருந்து விஸ்வநாதனை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் கீழே விழுந்து தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. மேலும் ரெயிலில் இருந்த சந்திரசேகர் மற்றும் சக பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால் தான் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த வேலு, ரெயில் கண்ணுடையான்பட்டி அருகே வந்த போது, அவரும் ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருச்சி ரெயில்வே போலீசார், விஸ்வநாதனை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கும், வேலுவை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர், வேலு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில் வேலு மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் திருச்சி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் லூர்துசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். மேலும், வேலு மீது ரெயிலில் இருந்து குதித்தது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்