மதுக்கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு பாராட்டு
மதுக்கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் அதிகரித்து வருகிறது. கிராம பகுதிகளில் சாராய விற்பனை அதிகரித்துள்ளது. மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டன. இங்கு பணியமர்த்தப்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இதுவரை மது கடத்தியவர்கள் ஏராளமானோரை கைது செய்துள்ளனர். நள்ளிரவு நேரங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் அனைத்து சோதனை சாவடிகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் தற்காலிக சோதனை சாவடிகளில் மதுக்கடத்தலை தடுக்கும் பணியில் திறம்பட பணியாற்றிய போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டினார். மேலும் திறமையை ஊக்குவிக்கும் விதமாக வெகுமதியும் வழங்கினார்.