விரைவில் அனைத்து பகுதிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விரைவில் அனைத்து பகுதிகளிலும் காலை உணவு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2023-02-01 12:11 GMT

வேலூர்,

காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நான் இங்கு விழா பேரூரையாற்ற வரவில்லை. உங்களுக்கு நன்றி கூற வந்திருக்கிறேன். இந்த பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த பள்ளிக்குள் நுழைந்ததும் அமைச்சர் துரைமுருகன் அவர் இங்கு படித்ததாக கூறினார்.

அவர் படித்த பள்ளியில் இது போன்ற திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை சார்பில் புதிய வகுப்பறைகள் கட்டவும் ரூ. 2400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பள்ளி கட்டிடங்கள் பழுதான வகுப்பறைகள் சீரமைக்க இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் ரூ.784 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 7 ஒன்றியங்களில் 55 பள்ளிகளில் 114 புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்க நாட்டப்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தவறாமல் ஒன்றை குறிப்பிட்டு வருகிறேன். இந்த அரசை பொறுத்தவரை கல்வி மருத்துவம் இரண்டு கண்களாக பாவித்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தொகுதி வாரியாக திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அவ்வாறு பள்ளிகளில் ஆய்வுக்கு சென்றபோது காலை உணவு கூட சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறோம் என உருக்கமாக பள்ளி மாணவ- மாணவிகள் என்னிடம் கூறினார்கள்.

இதனை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதனை தொடர்ந்து காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி செப்டம்பர் 15-ந்தேதி முதல் அதனை பல பகுதிகளில் நிறைவேற்றி வருகிறோம். விரைவில் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்.

சில பள்ளிகளில் மரத்தடியில் மாணவ-மாணவிகள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. உடனடியாக அதை சீர் செய்யும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடங்களை மாணவ- மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்