தாய் கண் எதிரே மகன் குத்திக்கொலை: 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு
முன்விரோதம் காரணமாக தாய் கண் முன்னே அவரது மகனை கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தீபாவின் மகன் அப்பு என்ற ஆகாஷ் (வயது 24). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி மது அருந்திவிட்டு பாட்டிலை சுவரில் வீசியுள்ளார். அதில் உடைந்த பாட்டில் துண்டுகள், அங்கு நின்றிருந்த சுகுமார் (24) என்பவர் மீது பட்டன.
அதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு அன்று இரவே சுகுமார் தன் நண்பர்களான குப்பன் (24), பழனிவேல் (23), ராஜா (22) ஆகியோருடன் அப்புவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வீட்டில் தாயாருடன் பேசிக்கொண்டிருந்த அப்புவிடம், பேச வருமாறு வெளியில் அழைத்துள்ளனர். வெளியே வந்த அப்புவை அவரது தாய் கண் முன்னே கத்தியால் குத்தினர்.
அதில் படுகாயம் அடைந்த அப்பு, ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுகுமார், குப்பன், பழனிவேல், ராஜா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு, சென்னை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சுகுமார் இறந்துவிட்டார். மற்ற 3 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.ஆனந்த் தீர்ப்பு அளித்தார். அதில், 3 பேர் மீதான குற்றச்சாட்டு போதிய சாட்சிகளுடன் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, குப்பன், பழனிவேல், ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் போலீசார் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வக்கீல் ரவிக்குமார் ஆஜரானார்.