மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

பரமத்திவேலூர் அருகே மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-27 18:45 GMT

பரமத்திவேலூர்

பொறியியல் பட்டதாரி

பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி, புதுவளவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 58). இவர்கள் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் செங்கோட்டுவேலன் (39). பொறியியல் பட்டதாரியான இவர் அப்பகுதியில் காளான் பண்ைண வைத்து நடத்தி வருகிறார். பழனியம்மாள் தனது மகள் ரம்யாவை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் செங்கோட்டுவேலுக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் செங்கோட்டுவேலனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு ரம்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வந்த செங்கோட்டுவேலன் நேற்று முன்தினம் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் வரும் படி அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மாமியாருக்கு கத்திக்குத்து

அப்போது மாமியார் பழனியம்மாளுக்கும், மருமகன் செங்கோட்டுவேலனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செங்கோட்டுவேலன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் பழனியம்மாளை குத்தியுள்ளார். அப்போது அதை தடுக்க வந்த ரம்யாவின் தம்பி மனைவி பாரதியையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் இருவரும் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் செங்கோட்டுவேலனை பிடித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பரமத்தி போலீசார் மாமியார் மற்றும் மைத்துனர் மனைவியை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட செங்கோட்டுவேலனை கைது செய்து பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்