எஸ்ஓஎல் இந்தியா நிறுவனத்தின் ஆலை விரிவாக்க திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ராணிப்பேட்டை சிப்காட்டில் ரூ.145 கோடி முதலீட்டில் அமையவுள்ள எஸ்ஓஎல் இந்தியா நிறுவனத்தின் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-07-20 00:13 GMT

சென்னை,

தமிழ்நாடு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்யவும், 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைந்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 681 கோடி முதலீட்டில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 836 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 240 திட்டங்கள், மாநிலம் முழுவதும் அமைக்கப்படுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆலை அமைக்கும் பணி

எஸ்ஓஎல் இந்தியா நிறுவனம் (முன்பு சிக்ஜில்சால் இந்தியா) இத்தாலி நாட்டைச் சேர்ந்த எஸ்ஓஎல் ஸ்பா மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இதன் உற்பத்தி மையங்கள் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் அமைந்துள்ளன.

தற்போது, இந்நிறுவனம் ரூ.145 கோடி முதலீட்டில் ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்கா நிலை-3-ல் திரவ மருத்துவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் மற்றும் திரவ ஆர்கான் உற்பத்தியை மேற்கொள்ளுவதற்காக அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது. அதற்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் முதல்-அமைச்சர் நேற்று தலைமை செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.

பங்கேற்றோர்

இந்த விரிவாக்கத்தின் மூலம் தற்போது நாளொன்றிற்கு 80 டன் என்ற அளவில் உள்ள உற்பத்தித் திறன், நாளொன்றிற்கு 200 டன் என்ற அளவிற்கு அதிகரிக்கும்.

இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு, எஸ்ஓஎல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் குலியோ லாபுமாகாலி ரொமாரியோ மற்றும் இந்திய செயல்பாடுகளின் இயக்குனர் வெங்கடேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்