திருப்பரங்குன்றம் பகுதியில் மெட்ரோ ரெயில் வழித்தடங்களில் மண் பரிசோதனை பணி தொடக்கம்
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் மண் பரிசோதனை பணி தொடங்கியது.
திருப்பரங்குன்றம்
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் மண் பரிசோதனை பணி தொடங்கியது.
ரூ.8,500 கோடி ஒதுக்கீடு
மதுரையில் திருமங்கலம்-ஒத்தக்கடைவரையிலும் சுமார் 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை அமைய உள்ளது. ஒத்தக்கடை, புதூர், சிம்மக்கல் மதுரை சந்திப்பு, பசுமலை, திருநகர், தோப்பூர், கப்பலூர், திருமங்கலம் ஆகிய இடங்களில் மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த திட்டத்திற்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதால் இந்த பகுதியில் மெட்ரோ ரெயில் டெப்போ அமையும் என்று தெரிகிறது. மதுரை பெரியார் பஸ் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், ரெயில் நிலையம் ஆகிய பிரதானமான 3 இடங்களை சந்திக்க கூடிய வகையில் பூமிக்கு அடியில் ரெயில் நிறுத்தம் அமைய சாத்தியகூறுகள் கூறப்படுகிறது.
வழித்தடத்தில் மண் பரிசோதனை
மதுரை மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணிகள் வருகின்ற 2024-ல் துவங்கி 2027-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆயத்த பணி நேற்று தொடங்கியது. அதில் திருப்பரங்குன்றம் பாண்டியன் நகர், திருநகர் பகுதிகளில் நெடுஞ்சாலையோரத்தில் மெட்ரோ ரெயில் வழித்தடமான பகுதியில் குடிநீர் குழாய்கள், பூமிக்கு அடியில் செல்லும் டெலிபோன் கேபிள்கள், மின்கம்பங்கள், மின் அழுத்த பாதைகள், பாதாள சாக்கடைகள் செல்லுகிறதா? என்று மெட்ரோ ரெயில் அமைப்பு வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவர்கள் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய கூடிய இடங்களையும் தேர்வு செய்தனர். ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பரிசோதனைக்காக மண் எடுத்தனர்.