சமுதாய கூடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்

அலகுமலையில் சமுதாய கூடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று ஆதிதிராவிட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

Update: 2023-04-03 17:55 GMT

அலகுமலையில் சமுதாய கூடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று ஆதிதிராவிட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

சமுதாய கூடம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்தில்அலகுமலை கிராம ஆதிதிராவிட மக்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக எங்கள் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அலகுமலை அடிவாரத்தில் சமுதாயகூடம் கட்டப்பட்டது. அது பயன்பாட்டில் இருந்து வந்தது. கொரோனா காலத்தில் இந்த சமுதாய கூடத்தில் நோயாளிகளுக்கு படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு படுக்கை அகற்றப்படாமல் அப்படியே சமுதாய கூடம் பூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி தலைவரிடம் கேட்டால் எங்களை திட்டி அனுப்பி விடுகிறார். எனவே சமுதாய கூடத்தை திறந்து நாங்கள் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்த உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

செல்போன் கோபுரத்துக்கு எதிர்ப்பு

திருப்பூர் அமராவதிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணி நடக்கிறது. குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைந்தால் குழந்தைகள், முதியோர் பாதிக்கப்படுவார்கள். எனவே செல்போன் கோபுரத்தை எங்கள் பகுதியில் அமைக்கக்கூடாது. தடுத்து நிறுத்த வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

சாமளாபுரம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில், 'நாங்கள் சாமளாபுரத்தில் வீட்டுமனை இடம் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். சமீபத்தில் எங்கள் இடத்துக்கான உரிய தொகை செலுத்தி வரன்முறைப்படுத்தி பயன்படுத்தி வருகிறோம். இந்தநிலையில் எங்கள் இடத்தை தனியார் ஒருவர் கம்பி வேலி அமைத்து அபகரித்து எங்களை மிரட்டி வெளியேற்றினார். கோர்ட்டில் போலி ஆவணங்களை கொடுத்து உத்தரவு பெற்று, கம்பி வேலி போட்டு எங்கள் நிலத்தை அபகரித்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்