சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.;
சென்னை,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் பட்டாசுக் கழிவுகளை சேகரிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவுகளை கொண்டு செல்வதற்காக மண்டலத்திற்கு 2 வாகனங்கள் என மொத்தம் 30 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நேற்று காலை முதலே பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்றும் அகற்றப்பட்ட பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையில் அறிவியல் பூர்வமாக அழிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.